மனோரமா விரும்பி, நிறைவேறாத அந்த ஒரு ஆசை

  • Editor
  • 27 May 2019
  •   Comments Off on மனோரமா விரும்பி, நிறைவேறாத அந்த ஒரு ஆசை

நகைச்சுவை, குணச்சித்திரம் என பன்முக நடிப்பை வெளிப்படுத்தியவர் ‘ஆச்சி’ மனோரமா. இன்று அவருக்குப் பிறந்தநாள். நடிக்கத் தொடங்கிய காலம் முதல், அவரது இறுதிக் காலம் வரை… அவரைப் பற்றிய சுவாரஸ்யமான நினைவுகளின் தொகுப்பு இது.தமிழ் திரையுலகம் ஆரம்பித்த காலகட்டங்களில் இருந்து இதுவரை க்கும்நம் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கின்ற எத்தனையோ கதாநாயகிகளைப் பார்த்திருப்போம். ஆனால், ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அவர்களுடைய புகழும், நடிப்பும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துவிடும். ஆனால், காலத்திற்கும் மாறாமல் காலத்திற்கேற்ப தன்னை மாற்றிக்கொண்டு நகைச்சுவை, குணச்சித்திரம் எனப் பன்முக நடிப்பை வெளிப்படுத்தியவர், ‘ஆச்சி’ மனோரமா.

நாடகத்துறை, சின்னத்திரை, வெள்ளித்திரை என நடிப்பின் அனைத்துப் பிரிவுகளிலும் தனது பெயரை நிலைநாட்டிய மனோரமா, நடிப்பில் ஐம்பது ஆண்டுகளைக் கடந்து ‘பொன்விழா’ கொண்டாடியவர். இன்று மனோரமாவின் 81-வது பிறந்தநாள். அவரைப் பற்றிய சில தகவல்கள் இதோ!.

மனோரமாவின் தந்தை காசி கிளாக்குடையார், தனது மனைவியின் தங்கையை இரண்டாம் தாரமாக மணந்துகொண்டு, பத்து மாதக் குழந்தையான மனோரமாவையும், அவரது அம்மாவையும் வீட்டைவிட்டு வெளியேற்றினார். அப்படி வெளியேறியதும், காரைக்குடி அருகிலுள்ள பள்ளத்தூரில் குடிபெயர்ந்து வீட்டு வேலைகளைப் பார்த்தும், பலகாரங்களைச் செய்தும் சில காலம் வாழ்க்கையை ஓட்டியிருக்கிறார், மனோரமாவின் தாயார்.

ஒருகட்டத்தில் அவருக்கு உடல்நலம் குன்றிப்போக, குடும்பப் பொறுப்புகளைச் சுமந்துகொண்டு பள்ளிக்கூடம் படிக்க வேண்டிய பன்னிரண்டு வயதில், பத்து ரூபாய் சம்பளத்தில் ‘யார் மகன்’ என்ற நாடகத்தின் மூலம் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார்.

‘கிராமத்தில் பொம்பளப் புள்ளைங்க வெளியே வர்றதே பாவம்’ என்றிருந்த காலகட்டத்தில் ‘கலைமாமணி நாடக சபா’ குழுவில் இரண்டாவது கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்தார், மனோரமா. ஒரு நாடகத்தில் நடிக்கத் திருமயத்தில் ரயிலேறியதும், நூறு பக்க வசனத்தை மனப்பாடம் செய்ய நாடகக் குழு கொடுத்துவிட, கோவையில் இறங்குவதற்குள் அத்தனை பக்கத்தையும் மனப்பாடம் செய்து முடித்திருந்தார், மனோரமா. இவர் கலையார்வத்திற்கு இந்த ஒரு நிகழ்வே சிறந்த சான்று.