உள்நாட்டு பாதுகாப்பை பலப்படுத்த இந்திய மத்திய, மாநில அரசு கூட்டு நடவடிக்கை!

bn157தீவிரவாத ஊடுருவல், தீவிரவாத தாக்குதல், பொருளாதாரத்தை சீர்குலைக்க கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடுதல் என நாட்டின் பாதுகாப்புக்கு ஏராளமான அச்சுறுத்தல்கள் உள்ளன. மத்திய அரசும் மாநில அரசுகளும் இணைந்து கூட்டு நடவடிக்கைகள் எடுத்து இந்த அச்சுறுத்தல்களை முறியடிக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
நாட்டில் பருப்பு வகைகள், சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விலை கடந்த சில மாதங்களாக அதிகளவில் உயர்ந்துள்ளது.

இதையடுத்து, நாட்டின் பொருளாதார நிலை, விலைவாசியை கட்டுப்படுத்துதல், உணவு தானிய உற்பத்தி, உள்நாட்டு பாதுகாப்பு ஆகியவை குறித்து ஆலோசிக்கும் வகையில் மாநில முதல்வர்கள் பங்கேற்கும் 2 நாள் மாநாடு டெல்லியில் கடந்த மாதம் கூட்டப்பட இருந்தது. கடும் பனிப்பொழிவு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட மாநாடு டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நேற்று தொடங்கியது. தமிழகம் சார்பில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வு குறித்து நேற்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. 2&ம் நாள் கூட்டம் இன்று நடந்தது. இதில், உள்நாட்டு பாதுகாப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.மாநாட்டுக்கு தலைமை வகித்து பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாவது: ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல் சம்பவங்கள் குறைந்தாலும், ஊடுருவல்கள் அதிகரித்துள்ளன. எல்லைக்கு அப்பால் உள்ள தீயசக்திகள், காஷ்மீரில் தீவிரவாதத்தை தூண்டுகின்றன. நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்க கள்ள நோட்டுகள் அச்சிடப்பட்டு, எல்லை வழியாக கடத்தி வரப்படுகிறது.
தீவிரவாதிகள் ஊடுருவல், நக்சலைட் தாக்குதல்கள், பொருளாதாரத்தை சீர்குலைக்க கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடுதல் என பல வடிவங்களில் உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்கள் உள்ளன. மத்திய அரசும் மாநில அரசுகளும் இணைந்து இந்த அச்சுறுத்தல்களை முறியடிக்க வேண்டும். இவ்வாறு மன்மோகன் சிங் பேசினார்.

மாநாட்டில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பேசியதாவது: உள்நாட்டு பாதுகாப்புக்கு நக்சலைட்களால் அச்சுறுத்தல் இருப்பது கவலை அளிக்கிறது. இதை முறியடிக்க சிறந்த நிர்வாகமும், பலமான காவல்துறையும் தேவை. நக்சலைட் ஆதிக்கம் உள்ள பகுதிகளை பாதுகாப்பு படையினர் மீட்டு வருகின்றனர். இந்த நிலை இந்த ஆண்டு வரை நீடிக்கும். நக்சலைட்களை ஒழிக்க மாநில அரசுகள் தகுந்த நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன். புதிய போலீஸ் சட்டம் பல மாநிலங்களில் அமல்படுத்தப்படவில்லை. அதன்படி, மாநில அரசுகள் போலீஸ் துறைக்கு ஆட்களை எடுக்க வேண்டும்.
காஷ்மீர் எல்லையில் தீவிரவாத ஊடுருவல் அதிகரித்துள்ளது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள முசாபராபாத்தில் பிரிவினை சக்திகளின் செயல்பாடுகளை இந்தியா முறியடிக்கும். இங்கு தீவிரவாத அமைப்புகள் கடந்த 4&ம் தேதி கூட்டம் நடத்தியுள்ளன. இதில் லஷ்கர்&இ&தொய்பா, ஹிஸ்புல் முஜாகிதீன் போன்ற அமைப்புகளும் கலந்து கொண்டுள்ளன. ஜம்மு காஷ்மீரை கைப்பற்ற வேண்டும் என்பது இவர்களது விருப்பம். இந்த எண்ணம் நிறைவேறாது. இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடும் அமைப்பின் தலைவர்களை, வங்கதேச அரசு கைது செய்கிறது. அல்லது இந்தியாவுக்கு திருப்பி அனுப்புகிறது. இதற்காக வங்கதேச அரசுக்கு நன்றி. இவ்வாறு சிதம்பரம் பேசினார்.