ஜனாதிபதி மஹிந்தவுக்கு டொக்டர் பட்டம்; ரஷ்ய பல்கலைக்கழகம் கெளரவம்
உலக சமாதானத்துக்கு ஆற்றிய சீரிய பங்களிப்பு, பயங்கரவாதத்தை முறியடித்தமை மற்றும் இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் கல்வி, கலாசாரம் உட்பட பல்வேறு துறைகளில் பங்களிப்பு செய்தமைக்காகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ரஷ்யாவின் மொஸ்கோ நட்புறவு (பட்ரிக் லுமும்பா) பல்கலைக்கழகம் விசேட கெளரவ டொக்டர் பட்டமொன்றை வழங்கி கெளரவித்துள்ளது.
ரஷ்யாவின் தலைநகரான மொஸ்கோவில் கிரெம்ளின் மண்டபத்தில் வைத்து நட்புறவு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பிலிபோவ் இந்த கெளரவ டொக்டர் பட்டத்தை நேற்று முன்தினம் ஜனாதிபதிக்கு வழங் கினார். மொஸ்கோவின் ‘பட்ரிக் லுமும்பா’ பல்கலைக்கழகம் பின்னர் நட்புறவு பல்கலைக்கழகம் என அழைக்கப்பட்டது.
1995 முதல் உலகில் பல்வேறு துறைகளில் மேற்கொள்ளும் சேவைகள் தொடர்பில் அரச தலைவர்களுக்கு இந்த டொக்டர் பட்டம் வழங்கப்படுகிறது.
இந்த வகையில் மேற்படி டொக்டர் பட்டத்தை பெறும் 6 ஆவது அரச தலைவர் இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆவார்.
இதன் பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று (07) ரஷ்ய தலைநகரில் ரஷ்ய புரட்சிக்கு முன்னரும் பின்னரும் அரச நிகழ்வுகள் இடம்பெற்ற கிரெம்ளின் மண்டபத்தை பார்வையிட்டார்.
அத்துடன் ரஷ்ய புரட்சியின் பின்னர் தொழிலாளர்களின் வெற்றியின் ஞாபகார்த்தமாக விளங்கும் செஞ் சதுக்கத்தையும் ஜனாதிபதி பார்வையிட் டார்.
கிரெம்ளின் நூதனசாலைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சார் மன்னர்கள் காலத்தில் உபயோகித்த உடைகள் மற்றும் ஆபரணங்கள் ஆகியவற்றை பார்த்தார்.
அதன்பின் 17ஆம் நூற்றாண்டில் நிர்மாணிக்கப்பட்ட தேவாலயமொன்றுக்கும் ஜனாதிபதி விஜயம் செய்தார்.