மீண்டும் தலைதூக்கியுள்ள டெங்கு அபாயம்!
நாடெங்கும் டெங்குக் காய்ச்சல் மீண்டும் தீவிரமாகப் பரவி வருகிறது. கடந்த வருடத்தில் டெங்கு நோய் மோசமாகப் பரவியிருந்தது. டெங்கு நோய்க்குள்ளாகி கடந்த வருடம் மரணமடைந்தோரின் எண்ணிக்கை முந்நூறுக் கும் மேலானதாகும். அதேசமயம் கடந்த வருடத்தில் இந்நோயினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை முப்பத்து நாலாயிரத்தையும் தாண்டியிருந்தது.
கடந்த வருட இறுதியில் இந்நோயின் தாக்கம் சற்றுத் தணிந்தி ருந்த போதிலும், இவ்வருடம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில் மாத்திரம் டெங்கு நோயினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை இருபத்தைந்து ஆகும். நோயினால் பீடிக்கப்பட்டோர் மூவாயிரத்தையும் தாண்டி விட்டனர்.
ஏ. எச். 1 என். 1 என்ற பன்றிக் காய்ச்சலின் அச்சுறுத்தலில் இருந்து எமது நாடு தற்போது ஒருவாறு விடுபட்டு விட்டது. பன்றிக் காய்ச்சல் பரவும் வேகம் தற்போது வெகுவாகக் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. ஆனாலும் டெங்கு நோயானது அவ்வப்போது கட்டுப்பாட்டுக்குள் வருவதும் மீண்டும் தலைதூக்குவதும் வழமையாகியுள்ளது.
ஒருமாத காலத்தினுள் இந்நோயினால் இருபத்தைந்து பேர் மரணமடைவதென்பது மிகவும் பாரதூரமான விடயமாகும். சராசரியாக நோக்குகையில் டெங்குக் காய்ச்சலினால் தினமும் ஒருவர் மரணமடைவதாக எடுத்துக் கொள்ள வேண்டி யுள்ளது.
இந்நோயினால் மரணமடைவோரில் கூடுதலானோர் சிறார்களா வர். அதுவே பெரும் பரிதாபம். நாம் வெளியிடங்களில் நடமாடும் போதே டெங்கு நுளம்பின் தாக்கத்துக்கு இலக்காகும் ஆபத்து கூடுதலாக உள்ளது. நுளம்புகளின் தாக்கத்திலிருந்து பாதுகாப்புப் பெறும் அறிவு பெரியோரிடம் உள்ளது. ஆனால் இளம் சிறார்களுக்கு நுளம்புகளால் ஏற்படும் அபாயம் தெரிவதில்லை. சிறார்கள் நுளம்புத் தாக்கத்துக்கு இலகுவில் உள்ளாவதற்கு இதுவும் ஒரு காரணமெனலாம். அது மாத்திரமன்றி சிறார்களின் உடலானது டெங்கு வீரியமடைவதற்கு ஏதுவானதாக உள்ளதென டாக்டர்கள் கூறுகின்றனர்.
டெங்கு நுளம்புகளின் அபாயம் தொடர்பான பிரசாரங்களைப் பொறுத்த வரை எமது நாடு முன்னேற்றமான நிலையில் உள்ளதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். விழிப்புணர்வுப் பிரசாரங்களை சுகாதார அமைச்சு தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. ஊடகங்களின் பணியும் பாராட்டக் கூடியது.
எனினும் மக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு இன்னும் உருவாகவில்லை என்றே கூற வேண்டியுள்ளது. நுளம்பு களைக் கட்டுப்படுத்துவதில் சுகாதாரத் திணைக்களம் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் பொறுப்பு முக்கியமானதாக உள்ள போதிலும் பொதுமக்களின் பங்களிப்பும் விழிப் புணர்வுமே முக்கியமானவையாகும். டெங்கு நோய் மற்றும் அந்நோய்க் கிருமிகளைக் காவுகின்ற நுளம்புகள் தொடர்பாக போதிய அறிவு மக்கள் மத்தியில் ஏற்பட வேண்டியுள்ளது. அப்போதுதான் மக்களிடம் சுயபாதுகாப்பை எதிர்பார்க்க முடியும்.
நுளம்புகளிலிருந்து பாதுகாப்புப் பெறும் முறைகள் குறித்து மக்களுக்கு தற்போது உள்ளதைவிட மேலும் விளக்கிக் கூற வேண்டியதில்லை. ஊடகங்கள் மற்றும் துண்டுப் பிரசுரங்கள், சுவரொட்டிகள் வாயிலாக போதுமான அறிவுரைகள் வழங்கப்பட்டுக் கொண்டே வருகின்றன. எனவே, மக்கள் இவ்விடயத்தில் முன்னெச்சரிக்கை கொள்வதே இன்றியமை யாததாகும்.
மக்களுக்கு ஏற்படுகின்ற காய்ச்சல் சாதாரண காய்ச்சலாகக் கூட இருக்கலாம். ஆனால் காய்ச்சல் ஏற்பட்டதும் இரண்டு நாட்களுக்கு மேல் அஜாக்கிரதையாக இருந்துவிடக் கூடா தென்பதே வைத்தியர்கள் தற்போது கூறுகின்ற அறிவுரை யாகும். டெங்கு நோயென்பது அலட்சியமாக இருந்து விட்டால் உயிராபத்து மிக்கதென்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.