ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு மேவினுக்கு உத்தரவு

கடத்தல்கள் மற்றும் காணாமல் போனவர்கள் தொடர்பான வழக்கின் ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, மேவின் சில்வா இரகசியப் பொலிஸாரிடம் சில கடத்தல்கள் தொடர்பில் தமக்குத் தெரியும் என வாக்குமூலம் வழங்கியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. கடந்த ஆட்சிக் காலத்தில் மட்டக்குளிய பிரதேசத்தில் மூவர் கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் அவர்களது உறவினர்களால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணைகளின் போதே, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணியால் இவ்வாறு கூறப்பட்டது. இதனால் குறித்த கடத்தல்கள் தொடர்பிலான சில தகவல்கள் மேர்வின் சில்வாவுக்கு தெரிந்திருக்கக் கூடும் எனவும் இவை குறித்து அவர் நீதிமன்றத்தில் கூற வேண்டியது அவசியம் எனவும் சட்டத்தரணிகளால் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. இதனையடுத்து மேவின் சில்வாவுக்கு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதன்படி அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் எனினும் அவர் அவ்வாறு செய்யவில்லை. எனவே, நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மீண்டும் அவருக்கு நோட்டீஸ் அனுப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.