கூட்டமைப்பின் 96 பா.உ. களில் 70 பேர் தேசிய அரசாங்கத்திற்கு ஆதரவு

கூட்டமைப்பில் இருந்து தெரிவாகியுள்ள 96 பாராளுமன்ற உறுப்பினர்களில் 70 பேர் தேசிய அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார். இன்று கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதேவேளை தேர்தலில் தோற்றவர்கள் பாராளுமன்றத்துக்கு தேசியப் பட்டியல் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறித்து இதன்போது வினவப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் கடந்த தேர்தல்களில் மஹிந்த சமரசிங்க மற்றும் தான் உள்ளிட்டோர் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டினார். இதன்படி கட்சியால் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய தேசியப் பட்டியலில் பாராளுமன்றம் செல்ல மீண்டும் வாய்ப்பு கிட்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை தற்போதைய ஜனாதிபதியின் வேலைத்திட்டங்கள் மற்றும் கொள்கைகள் சர்வதேசத்தினால் பாராட்டப் பட்டுள்ளதாக இங்கு கருத்து வௌியிட்ட மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் தேசிய அரசாங்கம் அமைக்கப்படுவது கட்சிகளுக்குள் அல்ல எனவும் பாராளுமன்றத்திற்குள் எனவும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட, சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார். இதேவேளை முன்னாள் ஜனாதிபதியின் பங்கு குறித்து வினவப்பட்டதற்கு பதிலளித்த துமிந்த திசாாயக்க, அவர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இருந்தவர் எனவும், அவரது எதிர்கால பங்கு பற்றி அவரிடமே வினவ வேண்டும் எனவும் கூறினார்.